காலியாக உள்ள மருத்துவ கண்காணிப்பாளர் பணியிடங்களை விரைவில் நிரப்ப நடவடிக்கை

மாநிலத்தின் பல்வேறு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளின் கண்காணிப்பாளர் பொறுப்புகள் காலியாக உள்ள நிலையில் அவற்றை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாகவும், விரைவில் அவை அரசின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும்  சுகாதாரத் துறை உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் 22 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் உள்ளன. அவற்றில் முதல்வர், கண்காணிப்பாளர், நிலைய மருத்துவ அதிகாரி உள்ளிட்ட பொறுப்புகள் முதன்மையாக உள்ளன. கண்காணிப்பாளர் பொறுப்புகளைப் பொருத்தவரை சேலம், கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளைத் தவிர, பிற இடங்களில் நிரந்தரமாக அதற்கு எவரும் நியமிக்கப்படவில்லை. மாறாக, கூடுதல் பொறுப்பாக மட்டுமே சிலருக்கு அப்பதவி அளிக்கப்பட்டிருக்கிறது.  சில மருத்துவக் கல்லூரிகளில் கண்காணிப்பாளர் பணியிடங்கள் காலியாகவே இன்றளவும் உள்ளன.
முன்னதாக, அரசு மருத்துவமனைகளில் நிர்வாக பணியிடங்கள் காலியாக இருப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
அதை விசாரித்த நீதிமன்றம், மருத்துவ சேவைகளில் எந்த வகையிலும் தொய்வு ஏற்படக் கூடாது எனக் கூறி உடனடியாக அப்பணியிடங்களை நிரப்புமாறு அறிவுறுத்தியது. இதையடுத்து காலியாக இருந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் பொறுப்புகளில் சிலர் நியமிக்கப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக 20 மருத்துவக் கண்காணிப்பாளர் பொறுப்புகளையும் நிரப்புவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.  இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. கூடுதல் பொறுப்பாக கண்காணிப்பாளர் பணியைக் கவனித்து வரும் சிலரும் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளதாகத் தெரிகிறது. அடுத்த ஓரிரு நாள்களில் அவை இறுதி செய்யப்பட்டு அரசின் அனுமதிக்கு அனுப்பப்படும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

error: Content is protected !!