அடுத்த ஆண்டு முதல் ஒருங்கிணைந்த பி.எட். படிப்பு அறிமுகம்: துணைவேந்தர் தகவல்

மாணவிக்குப் பட்டம் வழங்கிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். உடன் பதிவாளர் என்.ரவீந்திரநாத் தாகூர், துணைவேந்தர் எஸ்.தங்கசாமி, நீதிபதி என்.வி.பாலசுப்பிரமணியன்,

தமிழகத்தில் வரும் கல்வியாண்டு முதல் 4 ஆண்டு ஒருங்கிணைந்த பி.எட். படிப்பு தொடங்கப்படும் என தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத் துணைவேந்தர் எஸ்.தங்கசாமி தெரிவித்தார்.

சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா சென்னைப் பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கலந்து கொண்டு அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள், பட்டங்களை வழங்கினார்.
பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் எஸ்.தங்கசாமி பேசியது: தேசிய ஆசிரியர் கல்விக் குழுமத்தின் அங்கீகாரத்துடன் தமிழகத்தில் வரும் கல்வியாண்டு முதல் நான்கு ஆண்டு ஒருங்கிணைந்த பி.எட். படிப்புகள் தொடங்கப்படும். இதன் மூலம் பிளஸ் 2 முடித்த மாணவர்கள் பி.ஏ., அல்லது பி.எஸ்சி. பட்டப்படிப்புடன் கூடிய பி.எட். படிப்பை 4 வருட ஒருங்கிணைந்த பி.எட். படிப்பாக படிக்கலாம். இதற்காக இணையதளம் மூலமாக டிசம்பர் 3 முதல் 31-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
விழுப்புரம்- சேலத்தில்… ஒருங்கிணைந்த பி.எட். படிப்புக்காக தமிழக அரசின் சார்பில் 5 புதிய உறுப்புக் கல்லூரிகள் தொடங்கப்படும். முதல் கட்டமாக விழுப்புரம் மாவட்டம் வி. மருதூர், சேலம் மாவட்டம் எடப்பாடி ஆகிய இடங்களில் 2 உறுப்புக் கல்லூரிகள் வரும் கல்வியாண்டு முதல் செயல்படும். மேலும் சென்னை ஆர்.கே.நகர், மதுரை மாவட்டம் மேலூர், இராமநாதபுரம் ஆகிய இடங்களில் மேலும் 3 கல்லூரிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
முன்னாள் நீதிபதி என்.வி.பாலசுப்பிரமணியன் ஆற்றிய பட்டமளிப்பு விழா பேருரை: ஆசிரியர் பணிக்கான முக்கியத்துவமும், மரியாதையும் எப்போதும் தொடரும். மாணவர்களுக்கு இருக்கும் திறமைகளில் முதன்மையான திறமையைக் கண்டறிந்து அதை வெளிப்படுத்தச் செய்வதே ஓர் ஆசிரியரின் மிக முக்கிய கடமையாகும். ஆசிரியர்கள் தங்களது நேர்மை, அர்ப்பணிப்பு போன்ற குணங்களால் மாணவர்களைக் கவர வேண்டும். கடினமான பாடங்களை மாணவர்களுக்கு எளிமையாகப் புரிய வைக்கும் உத்திகளை ஆசிரியர்கள் கையாள வேண்டும். கற்றலுக்கும், கற்பித்தலுக்கும் நவீன தொழில்நுட்பங்களை ஆசிரியர்கள் பயன்படுத்த வேண்டும் என்றார்.
34,943 பேருக்கு பட்டங்கள்: விழாவில் உயர்கல்வித்துறை முதன்மைச் செயலர் மங்கத்ராம் சர்மா, பல்கலைக்கழக பதிவாளர் என்.ரவீந்திரநாத் தாகூர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிகழாண்டு பி.எட். முடித்த 33,802 மாணவர்கள், எம்.எட். முடித்த 1,083 மாணவர்கள், எம்.ஃபில் நிறைவு செய்த 18 பேர், ஆராய்ச்சிப் படிப்பில் (பி.ஹெச்டி) 40 பேர் என மொத்தம் 34,943 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. (News From www.dinamani.com)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

error: Content is protected !!