மதுரை அகில இந்திய அறிவியல் மருத்துவமனையில் (எய்ம்ஸில்) 100 எம்பிபிஎஸ் இடங்களுடன் மருத்துவக் கல்லூரி

மதுரையில் அமையவுள்ள அகில இந்திய அறிவியல் மருத்துவமனையில் (எய்ம்ஸ்) 100 எம்பிபிஎஸ் இடங்களுடன் கூடிய மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட உள்ளதாக மக்களவையில் மத்திய அமைச்சர் அஷ்வனி குமார் சௌபே தெரிவித்தார்.
இது தொடர்பாக திருவள்ளூர் அதிமுக உறுப்பினர் டாக்டர் பி. வேணுகோபால் எழுப்பியிருந்த கேள்விக்கு மக்களவையில் மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சர் அஸ்வனிகுமார் சௌபே எழுத்துபூர்வமாக அளித்துள்ள பதிலில் தெரிவித்திருப்பதாவது:
மதுரையில் ரூ. 1,264 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை டிசம்பர் 17-ம் தேதி ஒப்புதல் அளித்தது. ஒப்புதல் தேதியில் இருந்து 45 மாதங்களில் மருத்துவமனை அமைக்க காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த மருத்துவமனையில் 11 சிறப்பு மற்றும் 15 உயர் சிறப்புத் துறைகளுடன்கூடிய 750 படுக்கைகள் அமைக்கப்படும். மேலும், அவசரச் சிகிச்சை, விபத்து சிகிச்சைக்கான படுக்கைகளுடன் மருத்துவமனை, தனியார் படுக்கைகள் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு, சிறப்பு மற்றும் உயர் சிறப்பு படுக்கைகள் அமைக்கப்பட உள்ளன. மேலும், 100 எம்பிபிஎஸ் இடங்கள், 60 பி. எஸ்சி (நர்சிங்) இடங்கள் கொண்ட மருத்துவக் கல்லூரியும் அமைக்கப்படும். ஆயுஷ் பிளாக், கலையரங்கம், விருந்தினர் இல்லம், விடுதிகள், உறைவிட வசதிகள் உருவாக்கப்பட உள்ளன. மருத்துவமனைக்காக ஓர் இயக்குநர் பணியிடத்தை உருவாக்குவதற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த மருத்துவமனை முற்றிலும் செயல்பாட்டுக்கு வரும் போது தினமும் 1,500 வெளிப்புற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்படும். இந்த மருத்துவமனையில் குழந்தைகளுக்கான பிரிவு, தோல் பிரிவு, எலும்பு பிரிவு, மகப்பேறு மருத்துவம், இதய சிகிச்சை, வயிறு சிகிச்சை பிரிவு, நரம்பியல், சிறுநீரகவியல், பிளாஸ்டிக் சர்ஜரி, புற்றுநோய் பிரிவு, கதிரியக்க சிகிச்சை பிரிவு என பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

error: Content is protected !!